“இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வந்தமையே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.” – ஜனாதிபதி மீது கடும் அதிருப்தியில் வாசுதேவ !

“அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை எனவும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விமல் வீரவன்ஸவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கியமை தவறானது என்று இன்று ஒட்டுமொத்த நாடும் கூறிவருகிறது.

இது மக்கள் ஆணைக்கும் எதிரான செயற்பாடாகும். இந்த நிலையில், நானும் இனிமேல் அமைச்சு பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

நான் இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்ல மாட்டேன். எனக்கு இனிமேல் அமைச்சருக்கான எந்தவொரு வரப்பிரசாதங்களும் தேவையில்லை.

அமைச்சருக்கான சம்பளம் கூட எனக்குத் தேவையில்லை. அடுத்த 3 வருடங்களுக்கு நான் இவ்வாறுதான் செயற்படுவேன் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், நாம் எதிரணியில் இணையவும் மாட்டோம். எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முற்பட்டும், அந்த முயற்சிகள் கைக்கூடவில்லை.

ஜனாதிபதியும் எதுவும் செய்ய முடியாத நிலைமையிலேயே இன்று உள்ளார். நாட்டு மக்கள் இன்று அதிருப்தியில் உள்ளார்கள். இதனை சுட்டிக்காட்டியே நாம் கருத்துக்களை வெளியிடுகிறோம்.

ஆனால், எமது ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயற்படுவதாலேயே இந்த விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கும்போதே நாம் ஜனாதிபதியுடன் ஒப்பந்தமொன்றை செய்துக் கொண்டிருந்தோம்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வரக்கூடாது என்று வலியுறுத்தினோம். எனினும், எமது ஒப்பந்தம் மீறப்பட்டது.

இதுவும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. அரசாங்கம் செய்தமை தவறு என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *