மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதவானுக்கு வழங்கப்பட்ட உத்தரவையடுத்து பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் மீண்டும் விசாரணைகள் மற்றும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர். எனினும், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மன்னார் நீதவானிடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது 90 சதுர அடி பரப்பளவில் புதைகுழி உள்ள பகுதி பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியை 2019ஆம் ஆண்டு இடைநிறுத்துவது தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
2019 ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நிலவரப்படி, புதைகுழியில் 156 நாட்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சியின் போது 342 மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 330 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.