இவர்களை நம்பி தானே எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம்.? – ஜனாதிபதியிடம் நீதி கேட்க திரண்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் !

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன்,  பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.  இதனையடுத்து ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

IMG 20220211 WA0053

ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவச் சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.  இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது.

எமது பிள்ளைகளை அவர்களை நம்பியே நாம் ஒப்படைத்தோம். எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தபோதும், அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரினர். மேலும் எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று காவற்துறையினரை பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக தடுத்து நின்றனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *