“காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கி இந்தப் பிரச்சினைகளை இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற, நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் நேற்றைய தினம் நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“காணாமல்போனோர் விடயத்தில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டியுள்ளது. நீண்ட காலமாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எவ்வாறெனினும், வடக்கில் காணமால் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் பலர் குறித்து அரசாங்கத்திடம் எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களைப் பெற்று இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கின்றது.
வடக்கில் யுத்தத்தின் போது காணமால் போனவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்தினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
ஆகவே அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் வழங்கக்கூடிய தீர்வுகள் என்ன? பாதிக்கப்பட்ட தரப்புக்கு நட்டஈடு வழங்குவது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கி இந்தப் பிரச்சினைகளை இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை அரச தலைவர் தொடர்ச்சியாக எம்மிடத்தில் வலியுறுத்தி வருகின்றார்.
வடக்கில் காணமால் ஆக்கப்பட்ட நபர்களின் உறவினர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள வேண்டும், ஆதாரங்களுடன் அவற்றை ஒன்று திரட்டி பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.