பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் முக்கிய சூத்திரதாரி ஒருவர் உள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து பதலகமவில் தனது கருத்தினை வெளியிட்டுள்ள சரத்வீரசேகர மேலும் தெரிவித்த போது,
தேசிய பாதுகாப்பினை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சதியாக இது இருக்கலாம். ஐந்து மணியளவிலேயே சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதால் சந்தேநபரை கைதுசெய்வதற்காக சிசிடிவியில் மூன்று மணிக்கு பின்னர் பதிவான காட்சிகளையே பொலிஸார் விசாரணை செய்தனர்.
கொழும்பில் மருத்துவமனையொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்டது போன்ற சம்பவமாக இது இருக்கலாம். பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். இலங்கை அரசாங்கத்தை செயல் இழக்கச்செய்வதன் மூலம் இலங்கையை பாதுகாப்பற்ற இடமாக சித்தரிப்பதற்கு முயலும் தனிநபர் அல்லது குழுவினரை கைதுசெய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.