கிளிநொச்சி – குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாகக் குறித்த வெடிபொருட்கள் தொடர்பில் நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலிற்கு அமைவாக தர்மபுரம் பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று இன்று அகழ்வு பணிகளை ஆரம்பித்தனர். பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவத்தினர் இணைந்து குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது 12.7 ரக துப்பாக்கி – 01, 12.7 ரக துப்பாக்கி ஸ்ரான்ட் – 02, ஆர் பி.ஜி துப்பாக்கி – 03, ரி 57 ரக துப்பாக்கி – 06, ரி 81 ரக துப்பாக்கி – 03, ஆர் பி ஜி செல் – 10, இயக்க தாமத கடத்திகள் – 11, அணைக்கட்டு தகர்க்கும் ஆயுதம் – 05, எல் எம் ஜி ரவைகூடு – 09, 12.7 துப்பாக்கி கூடு – 01, எம் பி எம் ஜி கூடு – 01, 12.7 ரவை செயின் – 08 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும், வெடி பொருட்கள் ஆகியன துருப்பிடித்துக் காணப்படுவதாகவும், அவை செயல் திறன் உள்ளவையா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெடி பொருட்கள் மீட்கப்படும் தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.