பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸோடு இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
இதுவரை புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக எந்தத்தகவலும் வெளியாகியிராத நிலையில் அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.