“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் என்னால் படம் பார்க்க முடியவில்லை.” – இரா.சாணக்கியன்

“தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதிக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) விஜயம் செய்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து மேலும் வெளியிட்ட இரா.சாணக்கியன்,

“நாங்கள் நாடாளுமன்ற தேர்தலின்போது எதிர்பார்க்கவில்லை இந்த மொட்டு அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20ஆசனங்கள் கிடைக்கும், நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாககூட இருக்கலாம் என்று நம்பிக்கையுடனே நாங்கள் அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டனர். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரச தரப்பிலும் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் உள்ள நிலையில் அதுவே இந்த மாவட்டத்தின் துரதிர்ஸ்டவசமாக மாறியுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த மாவட்டத்தில் உள்ள அரசாங்க அதிபரே முதலாவது அரசியல் கைதியாகவுள்ளார். சிறையில் அரசியல் கைதியைவிடவும் அவர் ஒரு அரசியல் கைதியாகவுள்ளார். நாங்கள் சிலவேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்மொழிவுகளைக்கேட்டால் அது அரசாங்கத்துடன் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரச்சினையாகவுள்ளது. அவ்வாறு வழங்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை நாங்கள் பேசவேண்டும். அரசியல் தீர்வுக்கான ஆதரவினை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கவேண்டும். தேசிய ரீதியான பொறிமுறையொன்றை நாங்கள் மாகாணசபை ஊடாக உருவாக்கமுடியும்.

இன்று தீர்மானங்கள் கொழும்பிலிருந்தே எடுக்கப்படுகின்றன. எங்களது கைகளில் அதிகாரம் இருக்குமானால் நாங்கள் எதனையும் செய்யமுடியும். இன்று கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் 10இலட்சம் ரூபாய் நிதிமட்டுமே வழங்கப்படுகின்றது. இதனைவைத்து எதனையும் செய்யமுடியாது.

எனக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்று ஆசையில்லை. நான் எனது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகயிருப்பதன் காரணமாக பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன். ஒரு படம் பார்க்கமுடியாது நண்பர்களுடன் சுற்றுலா செல்லமுடியாது. அவ்வாறு தெற்கு பக்கம் சென்றால் புகைப்படம் எடுப்பதிலேயே எனது நேரம் செலவாகிறது.

சர்வதேசம் மூலமே எமக்கான தீர்வுக்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கமுடியும். அதற்கான ஆதரவு தளம் இளைஞர் மத்தியில் இருக்கவேண்டும். அபிவிருத்தி என்பது மழைகாலத்தில் ஆட்டுக்குட்டி போடுவதும் கொங்கிரி ரோட் போடுவது மட்டுமல்ல.

தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும். கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் 2008 தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரையிலிருந்தது தமிழ் முதலமைச்சர், 2012 தொடக்கம் 2017வரையிலிருந்தது முஸ்லிம் முதலமைச்சர், இன்று அரசாங்கத்தின் திட்டம் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழும் என்ற அடிப்படையில் எந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவில்லையோ அந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்பட்டுவருகின்றது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *