முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் யோகராசா நிதர்சனா (12) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் ஒரு கை உடலில் இருக்கவில்லை என கூறப்படும் நிலையில், அதனை விலங்குகள் சேதப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.
மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற கிராமத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன சிறுமி, நேற்று வீட்டிற்கு சற்று தொலைவில் வெற்றுக்காணிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
இதேவேளை, நேற்று அந்த பகுதியில் இராணுவத்துடன் இணைந்து தேடுதல் நடத்திய போது, சடலம் காணப்படவில்லையென்றும், இரவோடு இரவாகவே சிறுமியின் சடலம் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலத்தை மீட்ட பொலிசார் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், முல்லைத்தீவு பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிசாரின் விசாரணை வளையத்திற்குள் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.