யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.
யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.
கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்ற போது வாள்வெட்டுக்ககுழுக்களின்“ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருந்த போதும் எந்தளவு தூரம் அவர் இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளார் என தெரியவில்லை. மேலும் யாழ்ப்பாண காவல்துறையினரின் அசமந்த போக்கும் இந்த வாள்வெட்டுக்குழக்களின் தொடர்ச்சியான அட்டகாசத்துக்கு காரணம். துரித கதியில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் மிக்பபெரிய சமூதாய சீரழிவு ஏற்கபடுவதற்கான வாய்ப்புள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கது.