தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்றிருந்தன.
தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் இந்த சந்திப்புகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது ,
13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தியாவிற்கு உறுதியளித்ததை போன்று 13ஆம் திருத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்து கோருவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, நிரந்தர தீர்வுக்கான அலுத்தங்களை ஒருபோதும் கைவிட போவதில்லையென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அது சமஷ்டி மற்றும் கூட்டு சமஷ்டியிலான தீர்வாகவே அமையும்.
இருப்பினும், தற்போது ஒற்றையாட்சியின் கீழ் உள்ள உரிமையைப் பெறுவதற்கான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் கூடி பொது ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதேநேரம், தேர்தல் முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதை மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.