அம்பாரை பொத்துவில் பிரதேச செயலாளரின் நிருவாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்தில் அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி அருகில் இரவோடு இரவாக புத்தர் சிலை வைப்பு மக்கள் பிரதிநிதிகள் பொது மக்கள் என ஓன்றுதிரண்டு வீதியில் அமர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர் .
இவ் சம்பவத்தினைத் அடுத்து தாண்டியடி மற்றும் சங்கமன்கண்டி கிராம பொது மக்கள் அணிதிரண்டு புத்தர் சிலை வைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தர் சிலையை உடனடியாக அவ்விடத்தில் இருந்து அகற்றக் கூறி வீதியில் ஒன்றுகூடி இருந்தனர்.
இதனை அறிந்து உடனடியாக திருக்கோவில் பொத்துவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிக்கப்பட்டு கலவரங்கள் ஏற்படாதவாறு பொலிசார் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனையறிந்து திருக்கோவில் பொத்துவில் காரைதீவு பிரதேச சபைகளில் தவிசாளர்கள் உதவி தவிசாளர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கணக்காளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.
இதேவேளை மக்கள் பிரதிநிதிகள் பௌத்த துறவியுடன் புத்தர் சிலையை அகற்றுமாறு தெரிவித்து கலந்தரையாடல்களில் ஈடுபட்டு இருந்தபோது பௌத்த துறவி இவ்விடம் தமக்கு உரியது என தெரிவித்து பொது மக்களின் கோரிக்கையை மறுத்து இருந்தனர்.
இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிராம பொது மக்கள் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.