“இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு தமிழ், சிங்கம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர்.” என மக்கள் விடுதலை முன்ணணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“நாட்டில் தற்போது எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறி வருகின்றன. இதற்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு துரிதம் காட்டவில்லை. மாறாக எரிவாயு அடுப்பு வெடிப்புக்கும் எரிவாயு சிலிண்டருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தனது இயலாமையையும் பலவீனத்தையும் மறைப்பதற்காகவே இப்படியான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட மின் விநியோக துண்டிப்புக்கும் இதே பாணியில்தான் முட்டாள்தனமான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். கேஸ் சிலிண்டர்களின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலேயே வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை, சமையலறைக்கு சமைக்கு செல்லும் பெண்களுக்கு இன்று உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எந்நேரத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெறும் என்ற அச்சம் உள்ளது. இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு தமிழ், சிங்கம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர். நாளை வேண்டுமானாலும் அவர்கள் இதனை செய்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.