நீண்ட கால காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும்முகமாகவே காணிப் பிரச்சினை உள்ளோரை சந்திக்க விரும்பினேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,
பல வருடங்களாக காணிப் பிரச்சினை என்பது தமிழ் மக்களுக்கு காணப்படுகின்றது. சில பேருக்கு 20 வருடங்கள் சில பேருக்கு 30 வருடங்கள் சிலர் தமது காணியினை இன்று வரை தெரியாதவர்களும் உள்ளார்கள். அவர்களுக்கு தமது காணி எங்கு உள்ளது என்பது தெரியாது அவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் அவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு படிமுறை உள்ளது.
அதன்படி தற்போது புதிய சில வழிமுறைகளும் வந்துள்ளன இவ்வாறான காணி பிரச்சனை விடயம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்தன எனினும் தற்போதுமூவாயிரமாக குறைந்துள்ளன.
எனவே ஏனைய தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஒரு நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக காணி பற்றி நாங்கள் பேசும் போது மிகவும் மனவேதனையாக உள்ளது. சிலர் கூறுவார்கள் தனது தாய் தந்தையர் வழங்கிய காணி என, சிலர் உற்றார் உறவினர்கள் வழங்கிய காணி என்பார்கள் எனவே இதற்கு ஒரு முடிவினை எடுத்து இந்த காணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும்.
பொதுமக்களின் காணிகளை சட்ட திட்டங்களை மீறி கையகப்படுத்த முடியாது. தற்பொழுது சிலர் அறிக்கையிட்டுள்ளார்கள். ஏதோ கூட்டம் வைக்கிறாராம் காணியை வேறொருவருக்கு வழங்கப் போகிறார் என, நான் அவ்வாறு கூறவில்லை. நான் சந்திக்க போவது என்ன விடயம் என்றே கூறவில்லை. எனவே நான் கூறாத ஒரு விடயத்தினை அறிக்கையிட்டுள்ளார்கள். அதாவது நான் ஆளுநர் பதவியில் உள்ள ஒருவன் சட்டத்தின் படியே சட்டத்தின் படி முறையின் படியே காணி பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும்.
எனவே சட்டத்தை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவே ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டுமாக இருந்தால் நான் சட்டத்தின் படியே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.