உகண்டாவின் விமானநிலையத்தை சீனா தன்வசப்படுத்தி கொள்வதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவையாகும் எனத் தெரிவித்துள்ள சீனத் தூதரகம், ‘கடன்பொறி’ என்பது முற்றுமுழுதாக மேற்குலக காலனித்துவத்தினால் கட்டியெழுப்பப்பட்டதோர் கருத்தியலாகும் என்றும் சுட்டிக்காட்டியது.
உகண்டா அரசாங்கம் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தமுடியாத நிலையிலிருப்பதன் காரணமாக அந்நாட்டிற்குச் சொந்தமான ஒரேயொரு சர்வதேச விமானநிலையம் தற்போது சீனாவின் வசமாகியிருப்பதாக அண்மையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது குறித்து உகண்டா சிவில் விமானசேவை அதிகாரசபையின் ஊடகப்பேச்சாளர் வியன்னே எம்.லுக்யா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக விளக்கமளித்திருந்தார்.
‘சீனாவிடம் பெற்ற கடனுக்குப் பதிலாக எமது ‘என்ரெபே’ சர்வதேச விமானநிலையத்தை வழங்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
நாட்டின் தேசிய சொத்தை உகண்டா அரசாங்கம் வேறு தரப்பினருக்கு வழங்காது. இத்தகைய சம்பவம் இடம்பெறாது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருப்பதுடன் தற்போது மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்.
ஆகவே விமானநிலையத்தை சீனாவிடம் வழங்குவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை’ என்று அவர் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக அதற்குத் தேவையான டொலரைத் திரட்டுவதற்குத் தீர்மானித்தபோது, மேற்குலகின் ‘கடன்பொறியிலிருந்து’ இலங்கையை சீனா பாதுகாத்ததாக அந் நாட்டுத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.