காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்தில் நீதி நிலை நாட்டப்பட வேண்டுமே தவிர நிதி தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
போர் முடிந்து கடந்த 12 வருடகாலமாக எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே போராடி வருகின்றோம். எமக்கு நிதி தேவையில்லை என்பதை இந்த நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் எப்போதோ நாம் தெட்டத்தெளிவாக கூறிவிட்டோம்.
எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு. அதற்காகவே வெயில் மழை பாராது வீதிகளில் இருந்து போராடி வருகின்றோம். வரவு செலவுத்திட்டத்தில் காணாமல் போன குடும்பங்களுக்காக 300 மில்லியன் அரசால் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எமக்காக இந்த நிதி ஒதுக்கப்படவில்லை.
இது காணாமல் போன எமது உறவுகளை சாட்டாக வைத்துக்கொண்டு தமது சிங்கள மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த நிதியினை ஜனாதிபதி ஒதுக்கியிருக்கின்றார் என்பதே எமது நிலைப்பாடு.
எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். வரவுசெலவு திட்டத்தில் 300 மில்லியன் ஒதுக்கப்பட்டமையை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். என்றார்