“வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைகளின் ஊடாக பாரிய யுத்தம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
”தமிழர்களின் பகுதியில் உள்ள பாரிய காடுகள் அழிக்கப்பட்டு தமிழர்களின் இனப் பரம்பலை அழிக்க சிங்கள மக்களிற்கு நிலத்தை வழங்கும் வனவளத் திணைக்களம் தமிழர்கள் பரம்பரையாக வைத்திருந்த நிலத்தையும் பறிப்பதுதான் ஒரு நாடு ஒரு சட்டமா? இவ்வாறான திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு பிக்குமாரும் முனைப்புக் காட்டுகின்றனர்.
இந்த நாட்டில் இன்று வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைகளின் ஊடாக பாரிய யுத்தம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
அதன் மூலம் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றது. இதனை அரசு கன கச்சிதமாக திட்டமிடுகின்றது. முல்லைத்தீவின் 27 கிராமங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களிற்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்களிற்கு எதிரான பகிரங்க யுத்தம் – தற்போதும் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.
அன்று குண்டு போட்டு அழித்தார்கள், இன்று நிலங்களை பறித்து தமிழர்களை நிர்க்கதி ஆக்குகிறார்கள் என சிறிதரன் பகிரங்கமாக கூறியுள்ளார்.