இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) தலைவராக விராட் கோலி பணியாற்றி வந்தார்.தலைமை பொறுப்பு சுமையால் தனது துடுப்பாட்டத் திறன் பாதிக்கப்படுவதாக அவர் கருதினார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து மட்டும் அவர் விலகி உள்ளார்.
தற்போது முடிந்த 20 ஓவர் உலக கோப்பையோடு அவர் தலைவர் பதவியை துறந்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பார்.
20 ஓவர் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதால் விராட் கோலியின் தலைமை பதவி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தலைமை பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் டெஸ்ட், ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தலைமை பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவரது முடிவை பொறுத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும், அது அவரின் முடிவுதான்.
விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளது. தலைமை பதவியில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். ஆக்ரோஷமாக இருந்து அணியை வழி நடத்தினார்.
ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்திய அணி கடைசியாக 2013 ஐ.சி.சி. போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின் 8 ஆண்டுகளாக எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்.
இரு நாடுகளிடையே போட்டிகளில் வென்றாலும், உலக அளவிலான போட்டியை வெல்லும்போதுதான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் கடினமான இந்த கால கட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.