“புரட்சிகரமான மாற்றத்தை நான் ஏற்படுத்தும் போது சில தடங்கல்களும் ஏற்படும்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

“புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும், அச்சவாலை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தெரிவித்துள்ளார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,..

அன்று நாம் வழங்கிய வாக்குறுதியை அவ்வாறே நிறைவுசெய்ய முடியவில்லை. ஆனாலும், அதில் எந்தவொரு குறையையும் வைக்காது, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதாக தெரிவித்தார்.

சேதன விவசாயம் போன்று, மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

பயறு, கௌப்பி, உளுந்து, மஞ்சள்  உட்பட 16 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று அதன் பிரதிபலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். கறுவா, மிளகு, மஞ்சளுக்கான உயர் விலையை விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்ற அந்த வருமானத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இந்நிலைமையைப் புரிந்துகொண்டு, பசுமை விவசாயச் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து, இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை.

தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன், மதில்களில் சித்திரங்களை வரைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஆரம்பித்தனர். மேலும் பலர், கைவிடப்பட்டிருந்த வயல்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்று வைத்த நம்பிக்கையுடன் புரட்சிகரமான மாற்றத்துக்காக மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *