இந்திய இருபது20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்த விராட் கோலி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய இருபது20 அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன்.
இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன்.
இருபதுக்கு20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், இருபதுக்கு20 அணி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
துபாயில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, இருபதுக்கு20 என அனைத்து அணியின் தலைவராக விராட் கோலி இருந்து வந்தார்.
இதேவேளை ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை.
இதற்கிடையில், விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இருபதுக்கு20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.