14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்திகதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்திகதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.
இந்த நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2-வது கட்ட பகுதியில் துபாயில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் (அதாவது 30-வது லீக் ஆட்டம்) 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகின்றது.
புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறி விடலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லியில் சந்தித்த லீக்கில் சென்னை அணி 218 ரன்கள் குவித்த போதிலும், அதை கீரன் பொல்லார்ட்டின் (34 பந்தில் 8 சிக்சருடன் 87 ரன்) அதிரடியால் மும்பை அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து அமீரக சீசனை சென்னை அணி வெற்றியோடு தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.