7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 17-ந் திகதி முதல் நவம்பர் 14-ந் திகதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் இந்திய அணிக்கு 2 உலக கோப்பை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் டிராபி கோப்பையை (2013) பெற்றுக்கொடுத்து இருக்கிறார்.
34 வயதான அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சியும், நன்றியும் மட்டுமே இப்போது என்னை வரையறுக்கும் இரண்டு வார்த்தைகளாகும்.
இவ்வாறு அஸ்வின் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
அவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அஸ்வின் 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். அவர் 79 டெஸ்டில் ஆடி 413 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.