தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் மிகச்சிறப்பான – அதே நேரம் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன். தன்னுடைய அபார பந்து வீச்சால் எதிரணி வீரர்களை நடுங்க வைக்கக்கூடியவர்.
இவர் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி, அதை ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர். 38 வயதான ஸ்டெயின், இன்று அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.. 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஸ்டெயின் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்துள்ளார்.
125 ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகளும், 47 டி20 போட்டியில் 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும், டி20-யில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.