இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் வரை நேற்று (08.07.2021) கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுடைய கைது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி சம்பந்தப்பட்டோர், எதுவென அறிவிக்கப்படாத கொரோனா தனிமைப்படுத்தல் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிட்டியுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக நேற்று (08.07.2021) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த நிலையில், கவ்விச் சுதந்திரத்தை வலியுறுத்தி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது எனவும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு தொழிற்சங்கம் என்ற வகையிலும் நியாயத்திற்காக பாடுபடுகின்ற ஒரு அமைப்பு என்ற ரீதியிலும் தோழர் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது போராட்ட சகாக்களுக்கும் ஏற்பட்டுள்ள மோசமான நிலை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமையாகும். இலங்கை ஆசிரியர் சங்கமானது எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் தோழமை உறவு பூண்டு, தொழிற்சங்க மற்றும் மனித உரிமை பொதுத் தளங்களில் மேதினம் உள்ளிட்ட பல செயற்பாடுகளில் எமது சங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதோடு, எமது சங்க அங்கத்தினர் மீதான உள்ளக விசாரணைகளுக்கு அவர்களின் சார்பில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்னிலையாகி உதவியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் கொரோனா இலங்கையையும் விட்டுவைக்கவில்லை என்பது உண்மைதான் எனினும் பெருந்தொற்றுக் கால சுகாதார நடைமுறைகள் என்ற போர்வையில் நியாயமான மக்கள் உரிமைச் செயற்பாடுகளையும் சுகாதார நடைமுறைகளினை பின்பற்றி நடைபெறும் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அத்துடன் நேற்றைய போராட்டக்காரர்கள் மீதான நியாயமற்ற அத்துமீறல்களையும் அராஜகங்களையும் வன்மையாகக் கண்டிப்பதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் மக்களினதும் மக்கள் செயற்பாட்டாளர்களினதும் செயற்பாடுகளை நியாயபூர்வமான வழியில் அணுக வேண்டும் என்று கௌரவ ஜனாதிபதி அவர்களையும், அரசாங்கத்தினையும் வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரம் நேற்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தேரர்,இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் உள்ளிட்ட 11 பேர் முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
உடுத்திய உடுப்போடு சரியான உணவோ சுத்தமான குடிநீரோ தமக்கு கிடைக்கவில்லை எனவும் தனிமைப்படுத்தல் விதிகளை பயன்படுத்தி தம்மை வேண்டும் என்றே தண்டிப்பதாகவும் கைதுசெய்யப்பட்மோர் விசனம் தெரிவித்துள்ளனர்.