உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தின் கீழ் வெனிசூலாவுக்கு 50 லட்சம் டோஸ்கள் மருந்து கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வெகுசில நாடுகளே கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துவருகின்றன. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில், வசதியான நாடுகள் மட்டும் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க கோவாக்ஸ் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்புடன் பல்வேறு நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்திவருகின்றன. இத்திட்டத்தின் படி, வசதியான நாடுகள் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்தை ஏழை நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா மற்றம் தென்னமெரிக்க நாடுகளுக்கு இத்திட்டம் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெனிசூலா நாட்டுக்கு இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்து கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
வெனிசூலாவில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே நாடு முழுவதும் காணப்படும் நிலையில், கோவாக்ஸ் திட்டம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.