இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாக மேற்கு கரை உள்ளது. இப்பகுதியின் அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 07வது நாளாகவும் தொடரும் போர் அப்பகுதியில் அமைதயின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காசா பகுதியில் நடைபெற்று வரும் மோதல் மேற்கு கரை பகுதிக்கும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்கும் படி கூறினார்.
காசா முனை பகுதியில் அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அமைதியை ஏற்படுத்த இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் ஜோ பைடன் பேசுவது இதுவே முதல்முறையாகும்.