பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வருபவர்களிடம் மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதியும், கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச மருத்துவமனை ஒன்றுக்கு பிசிஆர் பரிசோதனைக்குச் சென்ற ஒருவரை அங்கு வெளிநோயாளர் பிரிவில் கடமையிலிருந்த மருத்துவர் திருப்பி அனுப்ப முயன்றுள்ளார். தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பில்லாதவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்றும் காரணம் கூறியுள்ளார்.
ஆனால் – தனக்கு அறிகுறிகள் தென்படுவதால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூற, வேறு வழியில்லாமல் மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது,
பிசிஆர் பரிசோதனைக்கு வருபவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
பிசிஆர் பரிசோதனைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும். நாடு முழுவதும் பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெறும் அதேவேளை, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன என்றார்.