முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை எந்ததொரு நிகழ்வும் நடத்தக்கூடாது, மக்கள் ஒன்றுக்கூடக் கூடாது, பொது இடங்களில் நினைவுக் கூர கூடாது என தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதாவது, முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த செயற்பாட்டினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழைய இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.