ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள், ஊழியர்கள் என அனைவரும் அலறியடித்து வெளியேறினர். எனினும் தீ சூழ்ந்ததால், ஏராளமானோர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இன்று காலையில் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காயமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்யும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.