“மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – சீ.வி.விக்னேஸ்வரன்

“மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர்    சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மேயர் மணிவண்ணன் கைதானது சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “மாநகர காவல் படை என்ற பெயரில் மணிவண்ணன் அமைத்த சுகாதார கண்காணிப்பு குழுவின் சீருடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் ஆடையை ஒத்திருப்பதாகக் கூறியே மணிவண்ணனை அதிகாலை வேளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்திருக்கின்றது.

தூய்மை பேணுவதை குறிக்கும் வகையில் வெளிநாடுகள் பலவற்றில் இள நீல ஆடைகளை காவல் கடமைகளில் ஈடுபடும் குழுக்கள் பயன்படுத்துவது வழமை. கொழும்பு மாநகர சபையும் இள நீல நிற சீருடையுடன் பணியாளர்களை அமர்த்தியுள்ளது. ஆனால், யாழ் மாநகரசபை முதல்வருக்கு மட்டும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் அணிந்த ஆடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் இள நீல நிற ஆடையை ஒத்ததாகக் காணப்படுகின்றது என்று கூறுவது நகைப்புக்கு இடமானது, அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆவிகள் அரசாங்கத் தலைவர்களை நிதானம் இழக்க வைத்து விட்டனவோ நான் அறியேன்.

ஒரு சிறிய மாநகரத்தை நிர்வகிப்பதற்கும் தமது பிரதேசங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதற்குங் கூட தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கும் இந்த அரசாங்கத்தின் மனநிலையையும், செயற்பாடுகளையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகளின் சீருடைச் சீலையைப் போன்ற எந்த ஒரு சீலையையும் எவரும் பாவித்தலாகாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதோ நான் அறியேன். 12 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன புலிகள் மீது அரசாங்கத்திற்கு அவ்வளவு பயமா என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

இந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் எந்தளவு மோசமான ஒரு நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையில், மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதற்கும், முரண்பாடுகள் ஏற்படுவதற்குமான சூழ்நிலை காணப்படுகின்றது என்று ஐ. நா மனித உரிமைகள் சபை ஆணையாளர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமையை இந்த சந்தர்ப்பதில் நான் நினைவுபடுத்த விரும்புவதுடன், ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையையும் தமிழ் மக்கள் அதைக் கண்டித்து இருந்தமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆகவே, இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டுவரும்நிலையில், தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது.

மணிவண்ணன் கைது தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபை உட்பட இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் உடனடியாக தலையீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுவதுடன், மணிவண்ணனை உடனே விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் வேண்டிக்கொள்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *