ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (30.03.2021) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Dusseldorf விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு, புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தபோதிலும்31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.