“ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” – நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

“ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர வழிகளில்  பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ‘சமூக நீதி’ தொடர்பான கலந்துரையாடலின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையற்றதொன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்ல அவ்வறிக்கையின் இணைப்புகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எனவே ஒரு பகுதியை வைத்துக்கொண்டுதான் தற்போது விவாதம்கூட நடைபெறுகின்றது.

குறித்த தாக்குதலின் பின்புலம் என்ன, பிரதான சூத்திரதாரிகள் யார், திட்டமிட்டது யார் என்பன உட்பட தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதுதான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அனைவரினதும் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலும் அடி, முடி தொடர்பில் உரிய வகையில் ஆராயவில்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கின்றது.

எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து வழிகளிலும் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பிலும் தாக்குதலின் உண்மையான நோக்கமும் உரிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.

இதன் பின்னணியில் செயற்பட்டுள்ள வெளி சக்திகள் உள்ளிட்ட விடயங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்ககூடியதாக இருக்கும்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் மீதும் பேரினவாதிகள் பயங்கரவாத முத்திரை குத்தினர். இஸ்லாம் மதத்தையும் அவதூறுபடுத்தினர். அப்பாவி முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டனர். அவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

முஸ்லிம் வியாபாரிகளின் வர்த்தகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டது. எனவே தாக்குதலையடுத்து பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும்.

அவர்கள் தொடர்பான களங்கம் நீக்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *