ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி பெறும் நடவடிக்கையின் ஒரு படிக்கல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக்கொள்ள முனையும் இலங்கை அரசுக்கு, ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு அடியாகவே இருக்கும்.
இந்தத் தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், இந்தத் தீர்மானம் சரியான முறையில் செயற்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் இலங்கை அரசை சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நோக்கி உந்தித் தள்ள முடியும்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி பெறும் நடவடிக்கையின் ஒரு படிக்கல் இந்தத் தீர்மானம் என்று கூறமுடியும். இலங்கை தொடர்ந்தும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கண்காணிப்பில் இருப்பதற்கும் இந்தத் தீர்மானம் உதவும்.
ஐ.நாவில் பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளும், அதற்கு ஆதரவளித்த நாடுகளும் அத்தோடு நின்றுவிடாது இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
தீர்மானத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு – என்றார்.