கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது கிளிநொச்சி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் அருளம்பலம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கிளிநொச்சி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்த பொருட்களை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர்கள் காவல்துறையினரின் உதவியுடன் இன்று காலை எடுத்துச் செல்ல முற்பட்டனர்.
இதன்போது அங்கு ஒன்று கூடிய கிராம மக்கள், கத்திக்குத்துக்கு பலியானவரின் மனைவி மற்றும் உறவினர்கள் , காவல்துறையினர் சந்தேக நபர்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தினர்.
இதனையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டபோது கத்தியால் குத்திய நபரின் வீட்டில் தீ பரவல் ஏற்பட்டது. வீட்டில் ஏற்பட்ட தீ பரவலை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு தீ விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.