“தமது கடமைகளை சரிவர நிறைவேற்றத் தவறியதால் சூறையாடப்படும் இனமாக வடக்கு பெண்கள் வாழ்கின்றனர்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களைப் பாதுகாக்காத சமுதாயம் நாகரிகமற்ற சமுதாயம் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதுக்குடியிருப்பு பெண் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று (14.03.2021) இடம்பெற்றது.
யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்கு உட்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுவதோடு அதிகளவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள மாவட்டமாகவும் காணப்படுகின்றமையால் இம்மாவட்டத்தின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழனென்ற ரீதியில் தமக்கு இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளால் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
சுயதொழிலில் ஈடுபட்டு தமது பொருளாதாரத்தை முன்னெடுத்து வரும் பெண்களை பலப்படுத்துவதன் ஊடாகவே உண்மையான தேசிய பொருளாதாரத்தை இலங்கையில் கட்டியெழுப்ப முடியுமென்றும் வன்னி மாவட்டத்தில் அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அரசியல் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக அமைந்திருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.