“சீனி வரி முறைக்கேட்டில் இருந்து மக்களை திருப்புவதற்காகவே தற்போது புர்காவை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் பேசுகின்றது” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பெலவத்தயிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளதாவது,
“அரசாங்கம் பிரச்சினைகளை சிறந்த முறையில் உருவாக்குகின்றது. உதாரணமாக மரண தண்டனை குற்றவாளி பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிப்பது குறித்து பொதுமக்கள் கோபமடைந்தபோது, கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்தது.
இதன்போது மக்கள், ஜெயசேகர விவகாரத்தை மறந்து, கால்நடை படுகொலைகளின் நன்மைகள், தீமைகள் பற்றி பேசத் தொடங்கினர். அதேபோன்று தற்போதும் அரசாங்கம், சீனி ஊழலில் இருந்து பொதுமக்களை திசை திருப்ப நாட்டில் புர்காவை தடை செய்யும் பிரச்சினையை எழுப்பியுள்ளது.
சீனி மோசடியால் 156 பில்லியன் ரூபாய் வரி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் புர்காவை தடை செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றில் அதற்கு பொறுப்பான அமைச்சரொருவர் கையொப்பமிட்டுள்ளார். ஆனால் ஒப்புதலுக்காக கூட அந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இது மக்கள் கவனத்தை திசை திருப்பும் மற்றுறொரு முயற்சியாகவே நாங்கள் நினைக்கிறோம். இதுபோன்ற கொள்கை முடிவுகளை அரசாங்கம் எடுக்க விரும்பினால், அது சமூகங்களிடமும் மதம் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் பேச வேண்டும். அதன்பின்னர் அந்த முடிவை எடுக்க முடியும். அதுவே சரியான செயற்பாடு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.