“மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது” – செஹான் சேமசிங்க

“மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது” என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பொதுஜன பெரமுன பிரதான கட்சியாகவுள்ளது. நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கூட்டணியாகவே போட்டியிட தீர்மானித்துள்ளோம். மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சுதந்திர கட்சியினர் தனித்து செல்ல முன் உள்ளூராட்சி மன்ற பெறுபேற்றை மீட்டிப்பார்க்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. கூட்டணியாகவே மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.இத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அதிக மாகாண சபைகளை கைப்பற்றும்.

கூட்டணியில் இருந்து கொண்டு சுதந்திர கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளன.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரே இவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள். மாகாண சபை தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பொறுப்பு கூற வேண்டும்.

குண்டுத்தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சியினராக செயற்பட்ட காலத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். கூட்டணியமைத்து ஆட்சியமைத்துள்ளதால் உண்மையை பொய்யென குறிப்பிட முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *