உள்ளக பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்வோம் என தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டாமென, நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.
உள்ளக பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்வோம் என்பது கடந்த 50 வருடங்களாக விற்கப்படும் பழைய லேகியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முழுமையாக உள்நாட்டிலேயே இருக்குமாறும், உலகத்தை நாட வேண்டாமெனவும், பேஸ்புக் பதிவொன்றில் அமைச்சர் அலி சப்ரிக்கு ஆலோசனைக் கூறியுள்ள மனோ கணேசன், நமது பிரச்சினையை நாமே பேசி தீர்ப்போம் என தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டாமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான பக்கச்சார்பான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார். உள்ளக பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ள முடியுமெனவும், சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் பலமுறை பேசி, ஒப்பந்தங்களை ஏற்படுத்தியும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என மனோ கணேசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடன் இணைந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டாலும் அந்த ஒப்பந்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசாங்கங்கள் தவறிய நிலையில், ஏமாற்றமடைந்த தமிழர்கள் சர்வதேசத்தை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச 1990களில் தென் மாகாண சிங்கள இளைஞர்களுக்காக, உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வரலாற்று விடயங்களை தேடி அறிந்துகொள்ளுமாறும் அவ்வாறு செய்ய முடியாவிடின், தமது வேறு வேலைகளில் அவதானம் செலுத்துமாறும் மனோ கணேசன் தனது பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.