“தமிழர்களுடைய தேவைகளை அறியாத மாற்று அரசியல் செய்கின்ற சக்திகள் மீண்டும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்” – பிள்ளையான் குற்றச்சாட்டு !

“இலங்கைக்குள் நாங்களும் மக்களும் பேசி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை வெள்ளைக்காரர்கள் வந்து தீர்த்துவைப்பார்கள் என நாங்கள் சொல்லுவோமாக இருந்தால் மீண்டும் இந்த மக்கள் கஸ்டப்படுவார்கள்.” என மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தவினால் இன்று (20.02.2021) திறந்து வைக்கப்பட்டபோது அங்கு உரையாற்றிய மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியங்காடு உணவு களஞ்சியசாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் தொலை நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் புணருத்தாபனம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்களஞ்சியசாலையை வைபவரீதியகத் திறந்து வைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது மக்களுடைய எதிர்பார்ப்பை தேவைகளை அறியாத மாற்று அரசியல் செய்கின்ற சக்திகள் மீண்டும் இந்த மாவட்டத்திலும் இந்த நாட்டிலும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள், உங்களுக்குத் தெரியும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன நடந்தது அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுக்கு முன்னரிருந்த அமைச்சர் இந்த நாட்டிலே என்ன செய்தார். சதோச எங்கெல்லாம் திறக்கப்பட்டது, எங்கே மூடப்பட்டது, சதோச களஞ்சியங்களுக்குள் கூட போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன இப்படிப்பட்ட சம்பவங்களையெல்லாம் நாங்கள் பார்த்தோம், இவையெல்லாம் வரலாற்றில் மிக மோசமான சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இப்படியான சூழலிலே அந்த அரசாங்கத்தை பாதுகாத்தவர்கள் இப்பொழுது ஜெனிவாவைப்பற்றி போசுகின்றனர். ஜெனிவாவிலே போய் என்ன நடக்கப்போகின்றது என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் இலங்கைக்குள்ளே அரசாங்கமும் நாங்களும் மக்களும் பேசி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை இன்னமும் பிரச்சாரத்திற்காக அல்லது வெள்ளைக்காரர்கள் வந்து தீர்த்துவைப்பார்கள் என நாங்கள் சொல்லுவோமாக இருந்தால் மீண்டும் இந்த மக்கள் கஸ்டப்படுவார்கள்.

துன்பத்தோடும் வலியோடும் தங்களுடைய வாழ்விடங்களில் வாழ்ந்து தற்போது நிம்மதியாக வாழவேண்டுமென்று என்னுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலே தவிர, அந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் உசுப்பேற்றிவிட்டு வாக்குகளை எடுத்துவிட்டு பாராளுமன்றம் செல்வது எங்களுடைய நோக்கம் அல்ல, எமது மக்களுடைய வலிகளையும் வேதனையையும் சுமந்த ஒரு அரசியல் பிரமுகராக பிரதிநிதியாக எமது மண்ணை கட்டியெழுப்புவதற்கான நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.

அந்த முயற்சியையும் அரசாங்கத்தின் கொள்கையையும் இந்த மண்ணிலே கொண்டு வந்து சேர்த்து நம்பிக்கையூட்டி மக்களையும் மண்னையும் வாழ வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், உணவு ஆணையாளர் திணைக்கள பிரதம கணக்காளர் கலாநிதி. ஈ.எம்.என்.ஆர். பண்டார, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பலரும் பிரசன்னமாயிருந்நதனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *