“ஜனாதிபதிக்கு தமிழர் பற்றி தெரியாத விடயங்களை அவருடன் இருக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் வாழும், சிங்கள, தமிழ், மொழிகளை பேசும் பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் இலங்கை என்ற நாட்டை உருவாக்கவே நாம் முயல்கிறோம். அது எம் நோக்கம். ஆனால், தூரதிஷ்டவசமாக ஜனாதிபதியின் அரசு, இந்நாட்டில் “சிங்கள பெளத்தம் மட்டுமே” என்ற நாட்டை உருவாக்க பார்க்கிறது. அது பிழை. அது அவருக்கு புரியவில்லை.
இந்நாட்டின் வரலாற்றில் தமிழருக்கு உரிமை உண்டு. வடக்கு, கிழக்கில் பெளத்த புராதன சின்னங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம், இருக்கலாம். ஆனால், அவை தமிழ் பெளத்த புராதன சின்னங்கள். இந்நாட்டில் 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி இருந்தது. தென்னிந்தியாவிலும் அப்படிதான்.
ஆகவே பெளத்தத்துக்கு “சிங்களம்” என்ற லேபலை போட வேண்டாம். தமிழ் மக்களை அரவணைக்க பெளத்தத்தை பயன்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கூறுகிறேன்.
ஜனாதிபதிக்கு இது புரியாவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு புரியாததை, அவருடன் இருக்கும், தமிழ் அரசியலர்களான டக்லஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லித்தர வேண்டும். அமைச்சர் அலி சப்ரியும் சொல்லித்தர வேண்டும்.
தெரியாவிட்டால், சொல்லித்தர வேண்டுமல்லவா? இவற்றை ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஜனாதிபதிக்கு எங்கள் செய்தி. இதை அவருக்கு கொண்டு போய் சொல்லுங்கள். நாம் நாட்டை உருவாக்க விளைகிறோம். அவரது அரசு நாட்டை அழிக்க விளைகிறத என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.