பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம் – தடை உத்தரவு கோரிய பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரித்தது சாவகச்சேரி மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் !

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் சாவகச்சேரி மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் காவல்துறையினரால் தடை உத்தரவு விண்ணப்பங்களை தள்ளுபடி செய்துள்ளன.

இதன்படி, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தத் தடை உத்தரவு கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு சதி ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என காவல்துறையினர் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

“இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையை காவல்துறையினரின் தடை உத்தரவு கோரிக்கை மறுக்கின்றது. அத்துடன், ஒரு இனம் நாட்டுக்கு சதி செய்வதாக காவல்துறையினர் எண்ணுவது ஏனைய இனங்களுக்கு வெறுப்புணர்வைத் தூண்டும்.

கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பாக பேரணி இடம்பெறும் இடங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. இதனால் காவல்துறையினர் தாக்கல் செய்த அடிப்படையற்ற விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்” என சட்டத்தரணி கேசவன் சயந்தன் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதவான், காவல்துறையினரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதேபோன்று, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி காவல்துறையினர் தாக்கல் செய்த பேரணிக்கான தடை உத்தரவு விண்ணப்பங்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி ஆட்சேபனை தெரிவித்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

காவல்துறையினரின் விண்ணப்பம், சட்டத்தரணிகளின் ஆட்சேபனையை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா, காவல்துறையினரின் விண்ணப்பங்களை நிராகரித்து கட்டளை வழங்கினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *