சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதற்கிடையே 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரசின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவியது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே பரவிய வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் கொரோனா வைரஸ் உருமாறி பரவியது.
இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் உருமாறிய கொரோனாவால் ஐரோப்பா உள்பட சில நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்து மேலும் வலுவடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் அதிதீவிரமாக பரவும் தன்மையுடன் கூடிய மரபணு மாற்றம் அடைந்து தெற்கு இங்கிலாந்து பகுதி ஒன்றில் கண்டறியப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதுவரை இந்த வைரஸ் குறைவானவர்களுக்கே பரவி உள்ளது என்றும் வரும் நாட்களில் தான் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, ‘மீண்டும் உருமாறியுள்ள புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பலன் தருமா? என்பது சந்தேகம். இந்த புதிய வகை கொரோனாவை தடுக்க மற்றொரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்’ என்றனர்.