அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். சிலையில் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகள் உடைக்கப்பட்டு இருந்தன.
காந்தி சிலை உடைப்பு குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது:-
காந்தியின் நினைவுச் சின்னங்கள் இழிவுப்படுத்துவது குறித்து நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம். இந்த செயலை கண்டிக்கிறோம். இது தொடர்பாக விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.
டேவிஸ் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து அழிப்பு உள்ளிடக்கிய எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்கள் சமூகம் பலவிதமான பார்வைகள் மற்றும் மதிப்புகளை பிரதிபலிக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட மத்திய பூங்காவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கண்டன கூட்டம் நடத்தினர்.