“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தல் தோல்வியை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறியது போன்ற நிலை கோட்டாபாயராஜபக்ஸவுக்கு ஏற்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தனது முதல்பெயரை பயன்படுத்தியதால் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு நிகழ்ந்தது குறித்து ஹரீன்பெர்ணான்டோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு இரண்டு குணாதியசங்கள் உள்ளன என அவரே தெரிவித்துள்ளார் . ஒன்று பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய வேளை வெளிப்பட்ட குணாதிசயம் மற்றையது தற்போது காணப்படுவது. ஜனாதிபதி இரட்டை வேடமிடுகின்றார்.
ஜனாதிபதி கதாநாயகனாக அரசியலுக்கு வந்தவர் இன்று வில்லனாக மாறியுள்ளார் ஜனாதிபதி குறித்த அதிருப்தி மக்கள் மத்தியில் அதிகரிக்கின்றது.
ஜனாதிபதி இராணுவமயமாக்கலை முன்னெடுக்கின்றார். 42 இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பல பதவிகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் 25 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப் தனது நடவடிக்கைகளில் தோல்வியேற்பட்டதை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறி நாடாளுமன்றத்திற்குள் கலகத்தில் ஈடுபடுமாறு மக்களை தூண்டினார். அவரின் நிலைமையே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.