அமெரிக்கா தான் தங்களது மிகப்பெரிய எதிரி எனக் கூறிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் “அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான பூசல் பலகாலமாக அனைவரும் அறிந்ததே.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் திகதி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம்மின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
வடகொரியா மீது வாஷிங்டன்னின் பார்வையில், கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. ஆகையால் எதிரிகளை சமாளிக்கும் வகையில், அணுஆயுதங்கள், ஸ்பை செயற்கைகோள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தையும் அதிகளவில் தயாரித்து இருப்பில் வைக்க வேண்டும்.
நமது அரசியல் கொள்கை நம்முடைய புரட்சிகரமான வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
இவ்வாறு கிம் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019ல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.