“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பல வருடங்கள் கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் தாம் தளர்வடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன். பேரினவாத அரசாங்கம் நாட்டில் தலைதூக்கியுள்ள நிலையில், எமது நாட்டில் எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகத்திற்குரியதாகும்.
எனவே தமிழ் மக்களின் போராட்டங்களை சர்வதேச பார்வைக்கு கொண்டுவருவது தலையாய கடமையாகும். பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே நீதிகிடைப்பது சாத்தியமாகும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.