இலங்கையில் கொரோனா வைரஸால் இறந்த முஸ்லீம்களுடைய உடல்களை எரிக்க வேண்டாம் என அவர்களுடைய உறவுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இது தொடர்பாக பலரும் தங்களுடைய எதிர்ப்பினை இது தொடர்பாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் “முஸ்லீம்களின் உடல்களை எரிக்கும் அரசாங்கத்தின் இந்த கொள்கை காரணமாக இலங்கை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாங்கள் முஸ்லீம்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள், சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்துகின்றது என்றால் நாங்கள் அதனை தவிர்க்கவேண்டும். ஆனால் இந்த விடயத்தில் கொவிட்19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் அரசாங்கம் அதனை இரத்துச்செய்துவிட்டு கொரோனாவினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை பின்பற்றுகின்றது.
உடல்களை அகற்றுவதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலோ அல்லது விஞ்ஞானரீதியிலான அடிப்படையிலேயோ அரசாங்கம் முன்னெடுத்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளோம்.
ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை, பல பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர்கள் இலங்கையில் இன்று பின்பற்றப்படும் கொள்கை விஞ்ஞானரீதியில் எந்த அடிப்படைகளையும் கொண்டிராதது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் ” என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.