“ஒரு பக்கம் சிறைக் கொலைகள் ,மறுபக்கம் ஊழல், மோசடிகள்தான் இந்த ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ராஜபக்ச அரசு இன்று தோல்வியடைந்த அரசாக மாறிவிட்டது. இந்த அரசை சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாட்டுக்குப் பொருத்தமற்ற ,நாட்டு மக்கள் விரும்பாத தலைகீழான நடவடிக்கைகளையே இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.
நல்லாட்சியில் நாம் முன்னெடுத்த உருப்படியான எந்த வேலைத்திட்டங்களையும் இந்த அரசு இதுவரை ஆரம்பிக்கவில்லை. ஒரு பக்கம் சிறைக் கொலைகள் ,மறுபக்கம் ஊழல், மோசடிகள்தான் இந்த ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன.
நாங்கள் அரசை எதிர்ப்பது ஒருபுறமிருக்க இந்த அரசை உருவாக்கியவர்களே அரசு அழிய வேண்டும் எனக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, 2021ஆம் ஆண்டு என்பது இந்த அரசின் அழிவின் ஆரம்பம் என நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.