“இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சரத் வீரசேகர உள்ளார் ” என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாக இன்று (21.12.2020), சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
குறித்த கேள்விக்கு பதில் வழங்கும்போதே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு சொல்லும் போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடந்தவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆகவே அரசாங்கம் அவ்வாறும் கூறுகின்றது இவ்வாறும் கூறுகின்றது . சரத் வீரசேகர கூறுவது தமிழ் மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுக்கக் கூடாது. இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளார்.
அவருடைய கருத்து பிழையானது என்பதனை நான் பல தடவைகள் எடுத்துக்கூறி வந்திருக்கின்றேன். உதாரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் எந்த காலத்திலும் பெரும்பான்மையாக இருக்கவில்லை. சரத் வீரசேகர பிழையான கருத்துக்களை பிழையான அடிப்படையில் வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு செய்வதால் நாட்டு மக்களிடையே நல்லுறவும் ஒற்றுமையும் ஏற்படாது என்பதனை அவர் மனதிலே வைத்திருக்க வேண்டும்.
எனவே அவருடைய கருத்தை வட.கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.