உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ.
முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போல்சோனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்ட போல்சோனாரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துவந்தார். அவருக்கு, 3 முறை கொரோனா பரிசோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது கொரோனா பரிசோதனையில் போல்சொனாரோவுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு
வந்ததையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தார்.
இதற்கிடையில், கொரோனா வைரசை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பலன் தருவது உறுதியாகியுள்ளது. இதனால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும், தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு பைசர் நிறுவனம் பல நாடுகளில் விண்ணப்பம் செய்துள்ளது. பிரேசில் நாட்டிலும் பைசர் நிறுவனம் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பத்துள்ளது.
ஆனால், பைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் அதை போட்டுக்கொள்ளப்போவதில்லை என பிரேசில் ஜனாதிபதி போல்சோனாரோ சமீபத்தில் தெரிவித்திருந்தார். அது தனது தனிப்பட்ட உரிமை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்கள் முதலையாகவும் மாறலாம் போல்சேனாரோ தெரிவித்துள்ளார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் (பிரேசில் அரசு போட்டுள்ள ஒப்பந்தம்) மிகவும் தெளிவாக உள்ளது. தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் (பிரேசில் அரசு) எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் நீங்கள் முதலையாக மாறினாலும் அது உங்கள் பிரச்சனை எனக் குறிப்பிட்டுள்ளார்.